டி.என்.பி.எஸ்.சி. குரூப்-3 ஏ தேர்வை பாதிக்கும் குறைவான நபர்களே எழுதினர்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-3 ஏ தேர்வை பாதிக்கும் குறைவான நபர்களே எழுதினர்
தஞ்சையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-3 ஏ தேர்வை பாதிக்கும் குறைவான நபர்களே எழுதினர். 3 ஆயிரத்து 888 பேர் தேர்வெழுத வரவில்லை.
குரூப்-ஏ தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டி.என்.பி.எஸ்.சி) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-3 ஏ பதவிக்கான எழுத்து தேர்வு தமிழ்நாடு முழுவதும் நேற்று நடந்தது. தஞ்சையில் இந்த தேர்வு 25 மையங்களில் நடைபெற்றது.
தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கலைக்கல்லூரி, கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி, சாஸ்த்ரா பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், சரபோஜி கல்லூரி உள்பட 25 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.
3,888 பேர் வரவில்லை
இந்த தேர்வினை எழுதுவதற்கு 7ஆயிரத்து 58 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் தேர்வினை பாதிக்கும் குறைவாக 3 ஆயிரத்து 170 பேர் மட்டுமே எழுதினர். 3 ஆயிரத்து 888 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வு பணிகளில் துணை தாசில்தார் தலைமையில் 25 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணித்தனர். தேர்வினை கண்காணிக்க 25 ஆய்வு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மொபைல் வாகனம் மூலம் 5 குழுவினரும் ரோந்து வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
தேர்வு நடைபெறும் மையங்களில் குடிநீர் வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டு இருந்தது. மேலும் தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரமும் வழங்கப்பட்டது. தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.