தூத்துக்குடியில்115 பயனாளிகளுக்கு ரூ.6¼ கோடி நலத்திட்ட உதவிகள்:அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
தூத்துக்குடியில்115 பயனாளிகளுக்கு ரூ.6¼ கோடி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
தூத்துக்குடியில் 115 பயனாளிகளுக்கு ரூ.6¼ கோடி நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
ஆய்வு கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி, 115 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 37 லட்சத்து 69 ஆயிரத்து 386 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்துக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா .ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் வரவேற்று பேசினார். தொடர்ந்து மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
அப்போது அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள், அரசின் சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அனைத்து திட்டங்களும் மக்களுக்கு விரைவாக கிடைக்க அரசு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ் குமார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ் குமார் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வரவேற்பு
முன்னதாக விமான நிலையத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு மற்றும் தி.மு.கவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.