கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் அஞ்சல் வழியில் சேர விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் அஞ்சல் வழியில் சேர விண்ணப்பிக்க   கால அவகாசம் நீட்டிப்பு
x

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் அஞ்சல் வழியில் சேர விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கால அவகாசம் நீட்டிப்பு

தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான 22-வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் படிப்பதற்கான பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி விண்ணப்பங்களை பெற வருகிற 12-ந் தேதி வரையும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பயிற்சி நிலையத்துக்கு அனுப்பி விண்ணப்பிக்க 17-ந் தேதி வரையும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தகுதிகள்

இந்த அஞ்சல் வழி மேலாண்மை பட்டய பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் முறையாக நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் பணியாளர்களில் பழைய 11-ம் வகுப்பு அல்லது புதிய 10-ம் வகுப்பு தேர்ச்சி உடைய கூட்டுறவு பயிற்சி படிக்காத பணியாளர்கள் மட்டும் அதிகபட்ச வயது வரம்பு இன்றி பயிற்சியில் சேரலாம். பயிற்சிக்கான மொத்த கட்டணம் ரூ.15 ஆயிரத்து 50 ஆகும்.

இந்த பயிற்சியில் சேருவதற்கு தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் தவிர பிற பணியாளர்கள், தனியார் மற்றும் பிற பொது விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி இல்லை. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முதல்வர், தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம், மில்கோ ஸ்டோர் வளாகம் கடற்கரை சாலை, சப்-கலெக்டர் அலுவலகம் அருகில், தூத்துக்குடி-1 என்ற முகவரியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story