சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்த்து வருவாயை பெருக்கஹைவேவிஸ் அணைகளில் படகு சவாரி தொடங்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு


சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்த்து வருவாயை பெருக்கஹைவேவிஸ் அணைகளில் படகு சவாரி தொடங்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்த்து வருவாயை பெருக்கும் வகையில் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள அணைகளில் படகு சவாரி தொடங்கப்படுமா? என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தேனி

தேனி மாவட்டம் என்றாலே எங்கு பார்த்தாலும் ஓங்கி உயர்ந்து காணப்படும் மலைத்தொடர்களும், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளும் தான் நினைவில் தோன்றும். மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 3,242.30 சதுர கிலோமீட்டர். இதில் 1,088.51 சதுர கிலோமீட்டர் பரப்பளவு வனப்பகுதியாக உள்ளது.

சோலைக்காடுகள்

மத்திய வனக்கொள்கை அடிப்படையில் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும். அந்த வகையில் தேனி மாவட்டத்தில் 33.6 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது.

இதில் சோலைக் காடுகள் நிறைந்த வனம் என்றால் மேகமலை, ஹைவேவிஸ் மலைப்பகுதிகள் தான். சின்னமனூர் நகரில் இருந்து இடதுபுறம் வானை நோக்கி உயர்ந்து உள்ள மலைகள் சூழ்ந்துள்ள இடம் தான் ஹைவேவிஸ் மலைப்பகுதி. கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரத்தில் இது அமைந்து உள்ளது. இந்த மலைப் பகுதியில் மணலாறு, ஹைவேவிஸ், மேல் மணலாறு, வென்னியாறு, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு போன்ற இடங்கள் உள்ளன. கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பச்சைப் பசேல் என தேயிலை தோட்டங்கள் காட்சி அளிக்கிறது.

அழகிய 5 அணைகள்

இந்த மலைப்பகுதியில் ஹைவேவிஸ் அணை, மணலாறு அணை, தூவானம் அணை, வெள்ளியாறு அணை, இரவங்கலாறு அணை என அழகிய 5 அணைகள் உள்ளன. அணைகளை சுற்றிலும் அலங்கரித்து வைக்கப்பட்டதுபோல் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. ஆண்டு முழுவதும் இந்த அணைகளில் தண்ணீர் இருக்கும்.

ஹைவேவிஸ் மலைப்பகுதியை 'குட்டி மூணாறு' என்று மக்கள் செல்லமாக அழைக்கும் அளவுக்கு அங்கு இயற்கை அழகு கொட்டிக்கிடக்கிறது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலை ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்து உருவாக்கியது போல், ஹைவேவிஸ் மலைப்பகுதியும் 1920-ம் ஆண்டு கால கட்டத்தில் ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்து உருவாக்கிய பகுதிகள் தான். இங்குள்ள தேயிலை தோட்டங்கள் ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த மலைக்கும் முதலில் ஆங்கிலேயர்கள் தான் சாலை அமைத்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள்

சிறந்த சுற்றுலா தலமாக திகழும் இந்த மலைப்பகுதிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. ஆசை, ஆசையாக இங்கு சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இங்கு பொழுதுபோக்கு அம்சங்கள் என்று சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் இல்லை.

கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பச்சைப் பசேல் என காட்சிகளை ரசிக்கலாம். அணைகளை பார்த்து ரசிக்கலாம். அவ்வப்போது மரங்களின் மீது காதல் கொண்ட மேகக்கூட்டங்கள் தரையிறங்கி வெண்பனி மேகங்களாக உலா வருவதை பார்ப்பதோடு, அவை உடலை வருடிச் செல்வதை அனுபவித்து ரசிக்கலாம். இங்குள்ள மகாராஜா மெட்டு என்ற இடத்தில் இருந்து கழுகுப் பார்வையில் தேனி மாவட்டத்தின் பல இடங்களை பார்த்து வியக்கலாம்.

படகு சவாரி

மற்றபடி, கொடைக்கானல், தேக்கடி, மூணாறு போன்று சுற்றுலா ரீதியிலான பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. குழந்தைகளை கவரும் சிறுவர் பூங்கா, மலர் பூங்கா, படகு சவாரி என்று எதுவும் இங்கு கிடையாது. இங்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. ஆனால், அந்த கோரிக்கைகளும் செயல்வடிவம் பெறாமல் இருக்கிறது.

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள அணைகளில் படகு சவாரி இயக்கப்பட்டு, சிறிய அளவிலான மலர் பூங்காக்கள், சிறுவர் பூங்காக்கள் அமைத்தால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் அரசுக்கு சுற்றுலா ரீதியிலான வருவாய் பெருகும். கூலி வேலையை மட்டும் நம்பி இருக்கும் இப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு, சுற்றுலா வளர்ச்சியால் வாழ்வாதாரமும் மேம்படும். ஓட்டல், தங்கும் விடுதி தொழில்களும் மேம்படும்.

இதுதொடர்பாக பல்வேறு தரப்பு மக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

வாழ்வாதாரம் மேம்படும்

ஆரோக்கியசாமி (தேயிலை தோட்ட தொழிலாளி, ஹைவேவிஸ்) :- ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் பலர் வருகிறார்கள். அவர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பிலும், தனியார் சார்பிலும் தங்கும் விடுதிகள் உள்ளன. சிறிய அளவிலான ஓட்டல்கள் உள்ளன. மற்றபடி கொடைக்கானல், ஊட்டி, மூணாறு போன்ற பகுதிகளைப் போன்று இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தால் ஏமாற்றம் தான் கிடைக்கும். இங்குள்ள குளு, குளு சீசனை அனுபவிக்கவே சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். ஒருமுறை வந்துசெல்லும் சுற்றுலா பயணிகளை மீண்டும் வரவழைக்க சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். இங்குள்ள அணைகளில் படகு சவாரி தொடங்கினால் சுற்றுலா வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். அதற்கான முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும்.

ரமேஷ் கண்ணன் (சுற்றுலா வாகன டிரைவர், சின்னமனூர்) :- ஹைவேவிஸ் செல்வதற்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பஸ் வசதி உள்ளது. இதனால், கார்களில் தான் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். வெளியூர்களில் இருந்து பஸ்சில் வந்து விட்டு, சின்னமனூரில் இருந்து கார்களை வாடகைக்கு எடுத்துச் செல்பவர்களும் உண்டு. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தினால் சுற்றுலா பயணிகள் வருகை ஆண்டு முழுவதும் அதிக அளவில் இருக்கும். அதன் மூலம் தேனி மாவட்டத்தில் சுற்றுலா வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரமும் மேம்படும்.

ஓட்டல் தொழில்

லட்சுமி (ஓட்டல் சமையல் தொழிலாளி, ஹைவேவிஸ்):- ஹைவேவிஸ் பகுதியில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு தான் ஓட்டல்கள் உள்ளன. இங்கு சுற்றுலா பயணிகள் வருகை எதிர்பார்த்து முன்கூட்டியே சமையல் செய்து வைத்தால் ஓட்டல் தொழில் பாதிக்கப்படும். ஒரு உத்தேச கணிப்பின்பேரில் ஓட்டல்களில் உணவு சமைக்கப்படுகிறது. சில நாட்கள் திடீரென சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருக்கும். அப்போது உணவு தட்டுப்பாடு நிலவும். சில நாட்களில் குறைவான எண்ணிக்கையில் வருவார்கள். அப்போது உணவு மீதமாகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஓட்டல்களில் முன்கூட்டியே உணவு தேவை குறித்து சொல்லிவிட்டால் தேவையான உணவை தயார் செய்து கொடுக்கிறோம். சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் இங்கு செயல்படுத்தப்பட்டால் உணவக தொழில் மேம்படும். சிறு தள்ளுவண்டி கடைகளில் நடத்திக் கூட பலரால் வாழ்வாதாரம் பெற முடியும்.

சுரேஷ் (சுற்றுலா வாகன உரிமையாளர், தேனி) :- மூணாறு, தேக்கடி போன்ற இடங்களில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய சுற்றுலா இடங்கள் பல உள்ளன. ஆனால், ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லை. சுற்றுலாவுக்கு குடும்பத்துடன் வருபவர்கள் பெரும்பாலும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவே வருகிறார்கள். குழந்தைகளை கவரும் வகையில் இங்கு எந்த சுற்றுலா திட்டங்களும் இல்லை என்பதால் ஒருமுறை வருபவர்கள் மறுமுறை வரத் தயங்குகின்றனர். இங்கு படகு சவாரி, சைக்கிள் சவாரி, சிறுவர் பூங்கா போன்றவை அமைக்கப்பட்டால் ஹைவேவிஸ் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் சுற்றுலா ரீதியான வளர்ச்சியை பெற முடியும். அரசுக்கும் வருவாய் பெருகும். சுற்றுலா வாகனங்களை நம்பி இருப்பவர்களின் வாழ்வாதாரமும் உயரும். இதுபோன்ற மலைவளம் கேரளாவில் இருந்து இருந்தால் கோடி கோடியாய் வருவாய் கொட்டிக் கொடுக்கும் வகையில் பல மாற்றங்களை கொடுத்து இருப்பார்கள். தமிழக அரசு இதுபோன்ற இடங்களில் சுற்றுலா திட்டங்களை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story