'கருப்பன்' யானையை பிடிக்க தாளவாடிக்கு 4-வது முறையாக கும்கி யானைகள் வரவழைப்பு


கருப்பன் யானையை பிடிக்க தாளவாடிக்கு 4-வது முறையாக கும்கி யானைகள் வரவழைப்பு
x

‘கருப்பன்’ யானையை பிடிக்க தாளவாடிக்கு 4-வது முறையாக கும்கி யானைகள் வரழைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு

தாளவாடி

'கருப்பன்' யானையை பிடிக்க தாளவாடிக்கு 4-வது முறையாக கும்கி யானைகள் வரழைக்கப்பட்டுள்ளன.

'கருப்பன்' யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உட்பட்ட தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து கடந்த ஆண்டு ஒரு யானை வெளியேறியது. அந்த யானை நாள்தோறும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது.

வனத்துறையினரால் 'கருப்பன்' என்று பெயரிடப்பட்ட அந்த யானை தோட்ட காவலுக்கு இருந்த 2 விவசாயிகளை மிதித்து கொன்றுவிட்டது. இதனால் 'கருப்பன்' யானையை பிடிக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் என 2 கும்கி யானைகள் இரியபுரம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டன.

4 முறை மயக்க ஊசி

கும்கி யானைகள் 'கருப்பன்' யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி அடித்தன. ஆனால் 'கருப்பன்' யானை மீண்டும் காட்டுக்குள் இருந்து வெளியேறி தோட்டத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியது. இதையடுத்து டிசம்பர் 15-ந் தேதி பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து மீண்டும் அரிசி ராஜா, கலீம், கபில்தேவ் என 3 கும்கி யானைகள் ஜோரக்காடு பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.

அப்போது கும்கி யானைகள் சுற்றி வளைக்க மருத்துவ குழுவினர் 'கருப்பன்' யானைக்கு மயக்கி ஊசி செலுத்தினார்கள். ஆனால் 4 முறை மயக்க ஊசி செலுத்தியும் 'கருப்பன்' யானை மயங்கவில்லை. இதனால் கும்கி யானைகள் மீண்டும் அழைத்து செல்லப்பட்டன.

அதன்பின்னர் 'கருப்பன்' யானை காட்டில் இருந்து வெளியேறி விவசாய தோட்டங்களை நாசம் செய்ய தொடங்கியது. இதனால் 'கருப்பன்' யானையை பிடிக்க வேண்டும் என்று மீண்டும் விவசாயிகள் போர்க்கொடி தூக்கினார்கள்.

கும்கி யானைகள் வந்தன

அதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் இருந்து பொம்மன், சுஜய் என 2 கும்கி யானைகள் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி தாளவாடிக்கு அழைத்து வரப்பட்டன. அதைத்தொடர்ந்து 25-ந் தேதி 'கருப்பன்' யானைக்கு 2 முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டன. ஆனால் அப்போதும் யானை மயங்காமல் காட்டுக்குள் ஓடிவிட்டது.

இதற்கிடையே நாள்தோறும் 'கருப்பன்' யானையின் அட்டகாசம் தொடர்வதால் 'கருப்பன்' யானையை பிடிக்க 4-வது முறையாக நேற்று காலை பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து மாரியப்பன் என்ற கும்கி யானை தாளவாடி வனச்சரகம் மகாராஜன்புரத்துக்கு லாரியில் கொண்டு வரப்பட்டது. இரவு சின்னதம்பி என்ற கும்கி யானையும் அழைத்து வரப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளை மயக்க ஊசி செலுத்தி 'கருப்பன்' யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

'கருப்பன்' யானைக்கு பெயர் மாற்றம்

தாளவாடி மக்கள் வனத்துறையினரிடம், அட்டகாசம் செய்து வரும் யானைக்கு காவல் தெய்வம் 'கருப்பன்' பெயர் வைத்தது தவறு. அதனால் யானையை மயக்க ஊசி செலுத்தியும் பிடிக்க முடியவில்லை. எனவே 'கருப்பன்' என பெயரிடப்பட்ட யானைக்கு வேறு பெயர் வைக்க வேண்டு்ம் என்று வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட வனத்துறையினர் 'கருப்பன்' யானைக்கு தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீர்கள்ளி தாளவாடி ஆண் 1 (எஸ்.டி.ஆர்.ஜே.எம்.-1) என பெயரிட்டுள்ளனர்.




Next Story