எனது மகன் விட்டுச்சென்ற பணிகளை தொடரஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்டேன்காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு
எனது மகன் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து செய்ய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்டதாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
வேறுபாடு கிடையாது
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பணிமனை ஈரோடு பெருந்துறைரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, எ.வ.வேலு, செந்தில் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த சோனியாகாந்தி, ராகுல்காந்தி, அழகிரி ஆகியோருக்கும், என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் அதிக பாசத்தை பொழிந்து வரும், தமிழ் மக்களின் காவலர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் பெயர் அறிவிப்புக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துக்கு எதையும் எதிர்பாராமல் பிரசாரத்தை தி.மு.க.வினர் ஆரம்பித்து இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் என்ற வேறுபாடுகள் கிடையாது. எல்லோரும் மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர்கள்.
பெருமை
இந்த தேர்தலில் மதச்சார்பற்ற அணியின் வேட்பாளராக போட்டியிடும் போது, தனிப்பட்ட முறையில் துக்கம் அதிகமாக இருந்தாலும் எனது மகன் விட்டுச்சென்ற பணிகளை தொடா்ந்து செய்ய வேண்டும் என்ற ஆவலில் தான் ஒப்புக்கொண்டேன். திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. ஆவதற்கு முன்பு என்னுடைய மகனாக இருந்தார். 1½ ஆண்டு காலமாக உழைத்த பிறகு அவருடைய அப்பா நான் என்று சொல்லக்கூடிய பெயரை எனக்கு விட்டு சென்று உள்ளார். இது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. எனது மகன் என்று சொல்வதைவிட நல்ல இளைஞரை இழந்து விட்டோம் என்ற வருத்தம் தான். குடும்பத்துக்கு ஏற்பட்ட வருத்தத்தைவிட ஈரோடு மக்களுக்கு ஏற்பட்ட வருத்தம் அதிகமாகும்.
பெரியார் ஈரோடு நகராட்சியின் தலைவராக இருந்தபோதுதான், முதல்முதலில் குழாயில் குடிநீர் வரும் வசதி செய்யப்பட்டது. தமிழகத்திலேயே முதல்முறையாக ஈரோட்டில் தான் செய்யப்பட்டது. அதை பார்க்க வந்த சேலம் நகராட்சியின் தலைவராக இருந்த ராஜாஜி, பெரியாருடன் நெருங்கி பழகினார். அதன்பிறகு கொள்கை அடிப்படையில் 2 பேரும் பிரிந்தனர்.
சிறந்த திட்டங்கள்
தி.மு.க. சார்பில் 1957-ம் ஆண்டு எனது தந்தை ஈ.வி.கே.சம்பத் ஈரோடு பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக பதவி வகித்தார். அவர் இந்தி பேசாத மக்களின் மீது இந்தியை திணிக்க மாட்டோம் என்ற உறுதியை தமிழினத்துக்கு வாங்கி கொடுத்தவர் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன். நான் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும், 5 சட்டமன்ற தொகுதிகளை காட்டிலும், ஈரோட்டில் அதிக வாக்குகளை எனக்கு மக்கள் கொடுத்தார்கள். இதை நான் மறக்க முடியாது. என் குடும்பத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு உற்சாகம் அளிக்கிறது.
எனது மகன் திருமகன் ஈவெரா ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி அனுமதி அளித்தது. அதேசமயம் இந்த தொகுதியில் அமைச்சர் சு.முத்துசாமி போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் நான் கேட்டுக்கொண்டதால் இந்த தொகுதியை விட்டு கொடுத்த மாமனிதர்தான் முத்துசாமி. எனது மகன் திருமகன் ஈவெரா சிறந்த திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். 800 இடங்களில் தெரு விளக்குகள் போடப்பட்டு உள்ளன. இன்னும் பல திட்டங்களை நிறைவேற்ற பாடுபட்டு கொண்டு இருந்தார். அனைத்து அமைச்சர்களும் அவரிடம் நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார்கள்.
மகுடம்
தமிழ்நாட்டுக்கு, தமிழ் மக்களுக்கு, தமிழ் மொழிக்கு, தமிழ் கலாசாரத்துக்கு காவலனாக போர் வீரராக காத்து கொண்டு இருப்பவர் மு.க.ஸ்டாலின். அவர் கரத்தை பலப்படுத்தும் வகையில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும்கூட, நாம் மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதுதான் மு.க.ஸ்டாலினுக்கும், ராகுல்காந்திக்கும் சூட்டுகின்ற மகுடமாக இருக்கும்.
எனது மகனைபோல், எனது தந்தையைபோல், எனது தாத்தா பெரியாரைபோல், வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக மக்களுக்காக உழைப்பேன்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.