கோபி அருகே சமையலர்களை மாற்றக்கோரி அரசு பள்ளிக்கூடத்தை பெற்றோர்கள் முற்றுகை
கோபி அருகே சமையலர்களை மாற்றக்கோரி அரசு பள்ளிக்கூடத்தை பெற்றோர்கள் முற்றுகையிட்டனா்
கோபி அருகே சமையலர்களை மாற்றக்கோரி அரசு பள்ளிக்கூடத்தை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமையலர்களை மாற்றக்ேகாரி...
ஈரோடு மாவட்டம் கோபி அருகே காசிபாளையம் இந்திரா நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 42 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் கடந்த 25-ந் தேதி காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக ஓடக்காட்டை சேர்ந்த சரோஜா, காந்தி நகரை சேர்ந்த காவியா ஆகிய 2 பேர் மகளிர் சுய உதவி குழு மூலம் சமையல் செய்ய பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள், பள்ளிக்கூடத்தில் வெளியூரை சேர்ந்த சமையலர்களை பணி செய்வதை மாற்றிவிட்டு, இந்திரா நகரை சேர்ந்தவர்களை தான் பணி நியமனம் செய்ய வேண்டும் என டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
முற்றுகை
ஆனால் சமையலர்கள் 2 பேரையும் மாற்றவில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளிக்கூடத்துக்கு 12 குழந்தைகள் மட்டுமே காலை உணவு திட்டத்துக்கு பெற்றோர்கள் அனுப்பினர். மீதம் உள்ள குழந்தைகளை காலை உணவு திட்டத்துக்கு பெற்றோர்கள் அனுப்பவில்லை. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் இந்திரா, டி.என்.பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்துக்கு நேரில் சென்று விசாரித்தனர். அப்போது இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் ஒன்று திரண்டு வந்து சமையலர்கள் 2 பேரையும் மாற்ற வேண்டும் என தரையில் உட்கார்ந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
உடனே பெற்றோர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், 'நாளை (இன்று) முதல் சத்துணவு ஊழியர்கள் மூலம் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும்,' என்றனர்.
இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.