வேப்பூரில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பா.ஜ.க., பா.ம.க.வினர் சாலை மறியல்


வேப்பூரில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி  பா.ஜ.க., பா.ம.க.வினர் சாலை மறியல்
x

வேப்பூரில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பா.ஜ.க., பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர்

வேப்பூர்,

வேப்பூர் அடுத்த சிறுநெசலூரில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. கடையின் அருகே, ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி, மாணவிகள் விடுதி, தேவாலயம், சார்பதிவாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை ஆகியன உள்ளன.

இதனால், இந்த பகுதியில் தேவையற்ற சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும், டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக போராட்டம் அறிவித்த அரசியல் கட்சியினருடன் தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் 5-ந்தேதிக்குள் (அதாவது நேற்று) பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக நேற்றும் வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதற்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தங்கதுரை தலைமை தாங்கினார். வேப்பூர் தாசில்தார் மோகன், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், மற்றும் அனைத்து கட்சியின் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

சாலை மறியல்

அதில் டாஸ்மாக் கடையில் உள்ள பார் மூடப்படுவதாகவும், டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய, இடம் தேர்வு செய்து வருவதால், நிர்வாக ரீதியாக 3 மாதம் கால அவகாசம் தேவை என டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கூறினார். இதனை ஏற்க மறுத்த பா.ஜ.க., பா.ம.க.வினர் கூட்டத்தில் இருந்து வெளியேறி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் வேப்பூர் சர்வீஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தங்கதுரை, சிறுநெசலூர் டாஸ்மாக் கடையை மூடுவதாக அறிவித்ததை தொடர்ந்து, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story