சாலைப்பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி விடுவதை நேர்மையாக நடத்தக்கோரி விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகை


சாலைப்பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி விடுவதை நேர்மையாக நடத்தக்கோரி  விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகை
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாலைப்பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி விடுவதை நேர்மையாக நடத்தக்கோரி விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளான பானாம்பட்டு, ராகவன்பேட்டை, பாண்டியன் நகர், கிருஷ்ணா நகர், இந்திரா நகர், கம்பன் நகர், கணேஷ் நகர், எம்.டி.ஜி. நகர், காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7½ கோடி மதிப்பில் சாலைப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு இன்று (வியாழக்கிழமை) மாலை 3.30 மணியளவில் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் என்றும், தகுதிவாய்ந்த ஒப்பந்ததாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க.வை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து அதற்கான காசோலையை தபால் மூலம் ஒப்படைப்பதற்காக நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

நகராட்சி அலுவலகம் முற்றுகை

ஆனால் இதனை பெற நகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் யாரும் அங்கு இல்லை. அங்கிருந்த ஊழியர்களும், இதனை வாங்க மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ் ஆகியோர் தலைமையில் நகராட்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செங்குட்டுவன், நகரமன்ற கவுன்சிலர்கள் கோல்டுசேகர், கலை, பத்மாபாஸ்கர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நகரமன்ற கவுன்சிலர் சுரேஷ்ராம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் ஜனநாயக முறைப்படி நியாயமான முறையில் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் நகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி காசோலைக்கான தபாலை பெற்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒட்டுமொத்த பணிகளையும் தி.மு.க.வினருக்கே வழங்க வேண்டும் என்பதற்காக ஒப்பந்தப்புள்ளி திறப்பதை நியாயமாக நடத்தாமல் மறைமுகமாக நடத்துகின்றனர். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அனைவருக்கும் ஜனநாயக முறைப்படி சரிசமமாக பணிகள் பிரித்து வழங்கப்பட்டது. ஆனால் தற்போது நகரமன்ற கவுன்சிலர்களுக்கே தெரியாமல் மறைமுகமாக நடத்த பார்க்கின்றனர். தற்போது ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட உள்ள பணிகளுக்கு நகரமன்றத்தின் அனுமதி பெறாமலேயே பணிகளை மேற்கொள்கின்றனர். எனவே இப்பணிகளுக்கு மன்றத்தின் அனுமதி பெற்று நேர்மையாகவும், ஜனநாயக முறையிலும் ஒப்பந்தப்புள்ளி திறக்க வேண்டும் என்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story