கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் கோபியில் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு
கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை என்று கோபியில் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களிடம் கூறினார்.
வளர்ச்சி திட்ட பணிகள்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மணியகாரன்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிய கட்டிடம், சிறுவலூரில் திருமண மண்டபம், கொளப்பலூரில் கலைஞர் பூங்கா, கோபி நகராட்சியில் கலைஞர் மேம்பாட்டு திட்ட பூங்கா திறப்பு விழா ஆகியவை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். விழாவில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வீடுகள் கணக்கெடுப்பு
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. பட்டா வழங்குதல், கட்டிய வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
எத்தனை பேருக்கு வீடுகள் தேவை என்பது குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்த அளவே உள்ளது.
தடுப்பூசி
கடந்த 2 தினங்களுக்கு முன்பு முக கவசம் கட்டாயம் என்பது குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். தடுப்பூசி முகாம்களில் தனி கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது. பள்ளிக்கூட மாணவர்களுக்கு தடுப்பூசி அவசியம் என்ற நோக்கில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
முன்னதாக நடந்த நிகழ்ச்சிகளில் அந்தியூர் தொகுதி ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., முன்னாள் சிட்கோ வாரியத் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், கொளப்பலூர் பேரூராட்சி தலைவர் அன்பரசு, கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் முருகன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.