பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்


பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்
x

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர்

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

கிராமசபை கூட்டம்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் தேவி செட்டிகுப்பம் ஊராட்சிக்கான கிராம சபை கூட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் மு.பாபு தலைமை தாங்கினார். ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், கனகராஜ், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பாதுகாப்பான சூழ்நிலை

அணைக்கட்டு ஊராட்சியில் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி மையம், நியாய விலை கடைகள், நூலக கட்டிடம், மகளிர் சுய உதவி குழு கட்டிடம், கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டிடம், மேல்நிலை நீர் தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு, கைப்பம்புகள், பொதுக் குழாய்கள், தெரு விளக்குகள், ஏரிகள், குளங்கள், சிறுமின் விசைப்பம்புகள், அரசு கட்டிடங்கள், ஆகியவற்றினை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

இந்த ஊராட்சியை வறுமை இல்லாத ஊராட்சியாக மாற்ற வேண்டும். அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கை மற்றும் செழிப்பு என்ற நிலையை ஏற்படுத்தவும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு தரமான குடிநீர் வழங்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். பாலின சமத்துவ அடிப்படையில் அனைவருக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துதல், பெண் மற்றும் பெண் குழந்தைகளை வலிமைப்படுத்தி பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தவும், நிலைத்த வளர்ச்சியை அடைவதில் இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் அதிகம் பங்கு உள்ளது. அவர்கள் முழு உத்வேகத்துடன் முடிவெடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் அரசு அதிகாரிகள், ஒன்றியக் குழு தலைவர் பாஸ்கரன் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story