ராணுவ வீரர்களின் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
ராணுவ வீரர்களின் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர்கள் நிகழ்ச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கமம் நிகழ்வு வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. முன்னாள் ராணுவவீரர் வேதபிரகாஷ் தலைமை தாங்கினார். விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். அருண்நம்பி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வீடு மற்றும் குடிநீர் வரிவிலக்கு தர வேண்டும். ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை ராணுவ பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். 7 ஆயிரத்து 500 முன்னாள் ராணுவ வீரர்களை ஒருங்கிணைத்து சங்கம் அமைத்து மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற வேண்டும். ராணுவ வீரர்களுக்கு உள்ள சலுகைகள், ஓய்வூதிய திட்டத்தை சங்கத்தின் மூலம் பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ராணுவ வீரர்களின் குடும்ப பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள அனைத்து வகையான ராணுவ வீரர்கள் உள்ளடக்கிய அனைத்து சங்கங்களையும் ஒன்றாக இணைத்து மாநில அளவில் புதிதாக ஒரு சங்கத்தை ஏற்படுத்தி மத்திய, மாநில அரசுகள் மூலம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை பெறுவது, சங்கம் மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.