தூத்துக்குடி கடல்பகுதியில் மீன்பிடிக்க மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துகிறார்களா?: அதிகாரிகள் ஆய்வு


தூத்துக்குடி கடல்பகுதியில் மீன்பிடிக்க  மீனவர்கள் தடை செய்யப்பட்ட  வலைகளை பயன்படுத்துகிறார்களா?: அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:45 PM GMT)

தூத்துக்குடி கடல்பகுதியில் மீன்பிடிக்க மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துகிறார்களா? என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

தூத்துக்குடி

முயல்தீவு:

தூத்துக்குடி கடல் பகுதியில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட வலைகளை மீனவர்கள் பயன்படுத்துகிறார்களா? என்பது குறித்து அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

அதிகாரிகள் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்களா? 5 கடல்மைல் தொலைவுக்குள் விசைப்படகுகள் மீன்பிடிக்கிறார்களா? என்பதை தூத்துக்குடி மாவட்ட கடலோர அமலாக்க பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமையொருபாகம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுக உதவி இயக்குனர் வைலா மற்றும் அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

படகில் சோதனை

அவர்கள் மீன்வளத்துறைக்கு சொந்தமான படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்துக்கு இடமான படகுகளை மடக்கி பிடித்து வலைகளை ஆய்வு செய்தனர். அதன்படி ஒரு படகை சந்தேகத்தின் பேரில் பிடித்து முயல்தீவு கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்தனர். அங்கு அந்த படகு முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளதா?, படகில் தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தப்படுகிறதா?, எந்த வகையான மீன்கள் பிடிக்கப்பட்டு உள்ளன? என்று ஆய்வு செய்தனர். ஆய்வில் அந்த படகில் தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்ததால், அந்த படகு நடவடிக்கை ஏதும் இன்றி விடுவிக்கப்பட்டது. இந்த திடீர் ஆய்வு மீனவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story