டாஸ்மாக் கடையில் வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.8 லட்சம் மோசடி :விற்பனையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு


டாஸ்மாக் கடையில் வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.8 லட்சம் மோசடி :விற்பனையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையத்தில் டாஸ்மாக் கடையில் வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

உத்தமபாளையம் வடக்கு ரத வீதியை சேர்ந்த முத்துக்கருப்பையா மகன் முத்துகார்த்தி (வயது 37). இவர், பி.இ. படித்துவிட்டு சின்னமனூரில் உரக்கடை வைத்துள்ளார். இவர், உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், கோவிந்தன்பட்டியைச் சேர்ந்த அய்யாவு மகன் முத்துகுமரேசன் (40). எனது நண்பரான இவர், அங்குள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நான் அரசு வேலைக்கு படித்து வருவதை அறிந்த அவர் டாஸ்மாக்கில் கண்காணிப்பாளர் வேலை வாங்கி தருவதாக கூறினார். மேலும் இந்த வேலைக்கு ரூ.10 லட்சம் கட்ட வேண்டும். ஆனால் நீ ரூ.8 லட்சம் மட்டும் தந்தால் போதும் என்று என்னிடம் ஆசை வார்த்தை கூறினார்.

இதை நம்பிய நான் ரூ.8 லட்சத்தை முத்துகுமரேசன் வங்கி கணக்கில் செலுத்தினேன். அதன்பின்னர் அவர் வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்தார். இதனால் நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன்.

அப்போது முத்துகுமரேசன், அவரது உறவினர் சரவணக்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறியதுடன், ஆபாசமாக பேசி கொலை மிரட்டலும் விடுத்தனர்.

எனவே வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த முத்துகுமரேசன் உள்பட 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் முத்துக்குமரேசன், சரவணன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story