ரூ.30 ஆயிரம் கடன் பெற ரூ.2 ஆயிரம் செலவு செய்ய வேண்டி உள்ளது
ரூ.30 ஆயிரம் கடன்பெற ரூ.2 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளதாக குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
ரூ.30 ஆயிரம் கடன்பெற ரூ.2 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளதாக குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்வுக்கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டனர். 77 விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
ரூ.2 ஆயிரம் வரை செலவு
ஆம்பூர் பெரியவரிகம் ஏரியின் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளதால், மழை பெய்தும் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை. மேலும், சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஏரியில் கலக்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். ரூ.30 ஆயிரம் கடன் பெற ஒரு விவசாயி ரூ.2 ஆயிரம் செலவு செய்ய வேண்டியுள்ளது. அப்படியே செலவு செய்தாலும் எளிதாக கடன் கிடைப்பதில்லை. கடன் பெற பிற வங்கிகளில் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும் என நிர்பந்தம் செய்கின்றனர்.
மின்னூர் ஏரி 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது. இதை மீட்க வருவாய் துறையினர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் கிடைக்கவில்லை. பல விவசாயிகள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். ஜலகம்பாறையை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் வனவிலங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக குரங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. விலங்குளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு
திருப்பத்தூரை அடுத்த சிம்மணபுதூர் ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். குரிசிலாப்பட்டு பகுதியில் நீர்நிலைகளில் இறைச்சி மற்றும் குப்பைக்கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் மாசடைகிறது. குறைந்த விலையில் உள்ள நவீன வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும். நெக்னாமலையில் 200 விவசாய குடும்பத்தினர் உள்ளனர். விளைப்பொருட்களை சந்தைப்படுத்த வாணியம்பாடிக்கு வரவேண்டியுள்ளது. எனவே, சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-
நடவடிக்கை எடுக்கப்படும்
ஏரி நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தோல் கழிவுகள் ஆற்றில் கலப்பது குறித்து ஆய்வு செய்யப்படும். கூட்டுறவு துறை அதிகாரிகள் கடன் விண்ணப்பங்களை ஒரு வார காலத்துக்குள் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு விரைவாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜலகாம்பாறை பகுதியில் வனத்துறையினர் ஆய்வு நடத்தப்படும். கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. நீர்நிலைகளில் குப்பைக்கழிவுகள், இறைச்சி மற்றும் மீன் கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் குறைந்த விலையில் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வேளாண்மை துணை இயக்குநர் பச்சையப்பன், வேளாண் அலுவலர் அப்துல்ரகுமான், வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.