பொது இடத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்டபெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்;2 வாலிபர்கள் கைது
பொது இடத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்ட பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சிவகிரி
பொது இடத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்ட பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ரோந்து
ஈரோடு மாவட்டம் சிவகிரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வி. இவர் நேற்று முன்தினம் இரவு விளக்கேத்தி மற்றும் எல்லக்கடை பகுதிகளில் போலீசாருடன் ரோந்து சென்றார்.
சிவகிரி-எல்லப்பாளையம் ரோட்டில் அவர் சென்றபோது, ஆண்டிகாடு முருகன் கோவில் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு வேன் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் தமிழ்ச்செல்வி அருகே சென்று பார்த்தார். அங்கு 2 பேர் மது குடித்துக்கொண்டு இருந்தனர். அவர்களிடம் தமிழ்ச்செல்வி பொது இடத்தில் மது குடிக்க கூடாது என்று கூறினார். மேலும் வேனின் ஆவணத்தையும் அவர்களிடம் கேட்டார்.
கைது
அதற்கு மது குடித்துக்கொண்டு இருந்த 2 வாலிபர்களும் தமிழ்ச்செல்வியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டலும் விடுத்தனர்.
இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் 'அவர்கள் சிவகிரி அருகே உள்ள கொந்தளம்புதூரை சேர்ந்த சசிகுமார் (வயது 37), ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த பொன்ரஞ்சித் (22) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் 2 வாலிபர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்திருந்த வேனையும் பறிமுதல் செய்தனர்.