மதிப்பூதியம் வழங்க வேண்டும்
ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்களுக்கும் மத்திப்பூதியம் வழங்கக்கோரி பேரணாம்பட்டு ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர் தீர்மானம் கொண்டு வந்தார்.
ஒன்றியக்குழு கூட்டம்
பேரணாம்பட்டு ஒன்றிய குழு கூட்டம், ஒன்றியக் குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் லலிதா டேவிட், ஒன்றிய ஆணையாளர்கள் ஹேமலதா, எழிலரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும், ஒன்றியக்குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன், மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கருணாநிதி நூற்றாண்டு வளைவு நுழைவு வாயில் கட்ட தீர்மானம் கொண்டு வந்தார்.
பின்னர் கூட்டத்தில் கவுன்சிலர்கர்கள் பேசியதாவது:-
மதிப்பூதியம்
பாஸ்கரன் (தி.மு.க.):- குண்டலப் பல்லி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 1,000 மரக்கன்றுகள் வைக்கப்பட்டது. ஆனால் மரக்கன்றுகள் பராமர்ப்பின்றி காய்ந்து வீணாகி வருகிறது. குண்டலப் பல்லி கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்கும் பணி 6 மாத காலமாக அடித்தளத்துடன் உள்ளது. பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
டில்லி ராஜா (தி.மு.க.):- நகராட்சி தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் போன்று ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தார். மேலும் ஊராட்சிகளில் மாட்டு கொட்டகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் மாட்டு கொட்டகை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மசிகம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு 3 வருடங்களாகியும் இது வரை பைப் லைன் கொடுக்கப்படாததால் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.
முன்னுரிமை அடிப்படையில்
ஹேமலதா ஆதி (தி.மு.க.):- ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர்கள் எங்களை மதிப்ப தில்லை.
ஆணையாளர் எழிலரசி:- முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் ஒற்றுமையாக இருங்கள், சபை நாகரீகத்தை அறிந்து பேசவும் என கூறினார். இதனால் அவருக்கும், கவுன்சிலர் ஹேமலதா ஆதிக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து பேசிய ஒன்றிய ஆணையாளர் ஹேமலதா, மொரசப்பல்லி, சாத்கர், ஏரி குத்தி, கொத்தப் பல்லி, எருக்கம்பட்டு உள்ளிட்ட பல ஊராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் முதல், ரூ.30 லட்சம் வரை அடிப்படை பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.