கட்டப்பட்ட வீடுகளை ஒப்படைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்த மக்கள்
தேனி அருேக கட்டப்பட்ட வீடுகளை ஒப்படைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருந்தனர்
தேனி அருகே தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்காக வடவீரநாயக்கன்பட்டியில் வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அந்த மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கட்டப்பட்ட வீடுகளின் சாவியை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி நரிக்குறவர் இன மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவர்கள் காத்திருந்தனர். அப்போது நிர்வாகிகள் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து, வீடுகளின் சாவியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து கலைந்து போகாமல் கலெக்டரின் கார் அருகில் காத்திருந்தனர். இதையடுத்து கலெக்டர் முரளிதரன் அங்கு வந்தார். அவரிடம், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். சில சரிபார்ப்பு பணிகள் முடிந்து, விரைவில் வீடுகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.