கட்டி முடித்த குடியிருப்புகளை ஒப்படைக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் மக்கள் தர்ணா
கட்டி முடித்த வீடுகளை தங்களுக்கு ஒப்படைக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மனுக்கள் கொடுத்தனர்.
இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு தேனி அருகே தென்றல் நகரை சேர்ந்த பொதுமக்கள் நேற்று வந்தனர். அவர்களுடன் தமிழ்ப்புலிகள் கட்சியினரும் வந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் மாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தை தொடர்ந்து அந்த மக்கள் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 'சொந்த வீடு இல்லாத நாங்கள் இலவச வீடு கேட்டு மனுக்கள் கொடுத்து வந்தோம். தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி, அம்மாபட்டி பகுதிகளில் அரசு 110 வீடுகள் கட்டியது. அந்த வீடுகளின் சாவிகள் எங்களிடம் ஒப்படைக்க இருந்த நிலையில் சிலர் இடையூறு செய்கின்றனர். எனவே கட்டி முடித்த குடியிருப்புகளை எங்களுக்கு ஒப்படைக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.
ஆர்ப்பாட்டம்
இதேபோல், கலெக்டர் அலுவலகம் முன்பு திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மணிப்பூரில் நடந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டும், மத்திய, மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் விடுதலைமாரி, தமிழரசி உள்பட பலர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் கணேஷ்பாபு என்பவர் கொடுத்த மனுவில், 'குமுளி, தேவாரம், சுருளி அருவி போன்ற பகுதிகளில் இருந்து கொடைக்கானல், தாண்டிக்குடி பகுதிகளுக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்' என்று கூறியிருந்தார்.