போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் மாணவர்களை நல்வழிப்படுத்த முன்வர வேண்டும்
போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் மாணவர்களை நல்வழிப்படுத்த சக மாணவர்கள் முன்வர வேண்டும் என கல்லூரி விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் பேசினார்.
நாகர்கோவில்:
போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் மாணவர்களை நல்வழிப்படுத்த சக மாணவர்கள் முன்வர வேண்டும் என கல்லூரி விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் பேசினார்.
பயிற்சி முகாம்
குமரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தனியார் அமைப்பான திருப்புமுனை ஆகியவை சார்பில் முதன்மை தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நாகர்கோவில் ஹோலி கிராஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடந்தது. முகாமில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கலந்து கொண்டு பேசியபோது கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் போதைப் பொருட்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருபவர்கள் மீது போலீசார், சமூகநலத்துறை, சுகாதாரத்துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் வாயிலாக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப் பொருட்கள் உட்கொள்ளும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, அந்த பழக்கத்தில் இருந்து விடுவிக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.
கடும் நடவடிக்கை
குறிப்பாக குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் உட்கொள்ளப்படுவதை கண்காணித்து போதைப் பொருட்களை புழக்கத்தில் விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் மாணவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் சக மாணவர்கள் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவர்களை நல்வழிப்படுத்த முன்வர வேண்டும்.
மருந்தகங்கள்
குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் மருந்தகங்களில் போதைப் பொருட்கள் விற்கப்படுகிறதா? என்பது குறித்து போலீசார், மருத்துவத்துறை, பொதுசுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளின் வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் போதைப்பொருட்கள் விற்கும் நபர்கள் குறித்த தகவல்களை 7010363173 செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, திருப்புமுனை இயக்குனர் நெல்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.