பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரிசி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில், தேனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிப் படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேனியில் ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினர் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று மாலை திரண்டனர். ஆனால் ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் உடையாளி, மாவட்ட செயலாளர் சென்னமராஜ் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.