நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மழைநீர் சேமிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்துவது அவசியம் - கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்


நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த   மழைநீர் சேமிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்துவது அவசியம் - கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்
x

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மழைநீர் சேமிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்துவது அவசியம் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர்

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மழைநீர் சேமிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்துவது அவசியம் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

நீர் பாதுகாப்பு மற்றும் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் திருவாரூரில் நடந்தது. திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டில் தண்ணீர் பற்றாக்குறையால் குளம், கிணறு, ஏரி, ஓடை போன்ற நீர் நிலைகள் வறண்டு காட்சி அளிக்கின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

நிலத்தடி நீர் மட்டம்

நீர் பாதுகாப்பு மற்றும் சேகரிப்பை ஊக்குவித்து நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு 'ஜல் சக்தி அபியான்' என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. அதன்படி வீடு, அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும்.

அதேபோல மழை நீரை சேமிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊர்வலத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் நிலத்தடி நீரை பாதுகாத்தல், மழைநீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி உள்ளிட்டவை தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி சென்றனர்.

துண்டு பிரசுரங்கள்

ரெயில் நிலையத்தில் புறப்பட்ட ஊர்வலம் பழைய பஸ் நிலையத்தை அடைந்தது. அப்போது பொதுமக்களுக்கு மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஷ்வரி, பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story