நெற்பயிரில் மகசூலை அதிகரிக்கச் செய்யும் துத்தநாக சத்து
நெற்பயிரில் துத்தநாக சத்து பற்றாக்குறையை போக்கி மகசூலை அதிகரிக்க செய்யும் துத்தநாக சத்தினை கரைக்கும் உயிர் உரங்கள் பற்றி வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் வை. ராதாகிருஷ்ணன் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலைய சுற்றுச்சூழல் விஞ்ஞானி மு.செல்வமுருகன் ஆகியோர் கூட்டாக அளித்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீடாமங்கலம்:
நெற்பயிரில் துத்தநாக சத்து பற்றாக்குறையை போக்கி மகசூலை அதிகரிக்க செய்யும் துத்தநாக சத்தினை கரைக்கும் உயிர் உரங்கள் பற்றி வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் வை. ராதாகிருஷ்ணன் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலைய சுற்றுச்சூழல் விஞ்ஞானி மு.செல்வமுருகன் ஆகியோர் கூட்டாக அளித்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
துத்தநாக சத்து பற்றாக்குறை
திருவாரூர் மாவட்ட மண்ணில் பொதுவாக துத்தநாக சத்து குறைவாக உள்ளது.
பயிர்களுக்கு நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களை போலவே துத்தநாக சத்தும் மிகவும் அவசியமான ஒன்றாகும். நெற்பயிரில் துத்தநாக சத்தின் பற்றாக்குறையானது அதிக அளவு காணப்படுகிறது. பொதுவாக துத்தநாக சத்தின் பற்றாக்குறையானது நெற்பயிரில் நடவு வயலில் முதல் 4 வாரங்களுக்குள் காணப்படும்.
இளம் நிலைகளின் நடு நரம்பு அடிப்புரத்திலிருந்து வெளுத்து காணப்படும். மேல்புறம் மற்றும் நடுப்பகுதி இலைகளில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும்.
பின் இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பழுப்படைந்து காய்ந்து விடும். வயலில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி இருப்பதும் துத்தநாக சத்து பற்றாக்குறை ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக விளங்குகின்றது.
உயிர் உரங்கள்
எனவே விவசாயிகள் தங்களது வயலில் எப்போதும் தண்ணீர் தேங்கி இல்லாமல் போதுமான ஈரப்பதம் மட்டும் கொண்டிருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். துத்தநாக சத்து பற்றாக்குறையினை போக்க ஒரு ஏக்கருக்கு அடியுரமாக 10 கிலோ துத்தநாக சல்பேட் உரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து இடுதல் வேண்டும். மேலும் பசுந்தாழ் உரங்கள், தொழு உரங்கள் மற்றும் உயிர் உரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலமாகவும் இதன் பற்றாக்குறையினை போக்க முடியும்.துத்தநாக சத்து உரங்களை பயிர்களுக்கு இடும்போது அதில் பாதி அளவு கரையாமல் துத்தநாக ஆக்சைடாகவும், துத்தநாக கார்பனேட்டாகவும் மாறுகிறது. இதனால் பயிர்கள் மண்ணிலிருந்து தங்களுக்கு தேவையான துத்தநாக சத்தை எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது. நெல்மணிகளில் துத்தநாக சத்தினை அதிகப் படுத்துவதற்காக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் கோயம்புத்தூர் புதிதாக துத்தநாக சத்தினை கரைக்கும் உயிர் உரங்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு அளித்து வருகிறது.
ஏக்கருக்கு 1 லிட்டர்
இதனால் நெல்மணிகளில் துத்தநாக சத்தின் அளவு அதிகரிப்பதோடு, நெற்பயிரில் மகசூல் 15 விழுக்காடு வரை அதிகரிக்கின்றது. துத்தநாக சத்தினை கரைக்கும் உயிர் உரங்களை, விதை நேர்த்திக்கு ஒரு கிலோ விதைக்கு 20 மி.லி. என்ற அளவிலும், வயலில் நேரடி இடுதலுக்கு ஏக்கருக்கு 1 லிட்டர் என்ற அளவில் 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.