கி.ராஜநாராயணன் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
கோவில்பட்டி மணிமண்டபத்தில் கி.ராஜநாராயணன் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் வளாகத்தில் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் மணிமண்டபத்தை நேற்று முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி முடிந்தபின்னர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மணிமண்டபத்துக்கு வந்து, டி.ராஜநாராயணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் பாண்டரமங்கலம் பஞ்சாயத்து அன்னை தெரசா நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நீதியிலிருந்து ரூ.15 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 23 நபருக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிசாமி, அ.தி.மு.க. நகர செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.