மயிலாடும்பாறை-தப்புக்குண்டு அரசு கல்லூரிக்குகூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும்:பொதுமக்கள் வலியுறுத்தல்
மயிலாடும்பாறையில் இருந்து தப்புக்குண்டு அரசு கல்லூரிக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
கடமலைக்குண்டு அருகே மயிலாடும்பாறை கிராமத்தில் இருந்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்காக மட்டும் கடமலைக்குண்டு, துரைச்சாமிபுரம், லட்சுமிபுரம் வழியாக தப்புக்குண்டு அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. மாலை கல்லூரியில் இருந்து மயிலாடும்பாறைக்கு அதே பஸ் இயக்கப்படுகிறது. இதனால் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சிரமமின்றி பஸ்சில் பயணம் செய்து வந்தனர். இந்த நிலையில் இந்த கல்வியாண்டில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக கல்லூரியில் சேர்ந்தனர். இதனால் மயிலாடும்பாறையில் பஸ் புறப்படும் போதே மாணவ-மாணவிகளால் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விடுகிறது.
இதையடுத்து கடமலைக்குண்டு கிராமத்திற்கு வரும் போது அங்கு 40-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பஸ்சில் ஏறுகின்றனர். இதனால் கடமலைக்குண்டுவை கடக்கும்போது மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் சில நேரங்களில் மாணவர்கள் முண்டியடித்து கொண்டு ஏறுகின்றனர். எனவே கிராமப்புற மாணவ-மாணவிகளின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும். அல்லது மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக பஸ் சேவை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.