கோபி அருகே அங்கன்வாடி மையத்தை திறக்கக்கோரி குழந்தைகளுடன் பெற்றோர்கள் உண்ணாவிரதம்
கோபி அருகே அங்கன்வாடி மையத்தை திறக்கக்கோரி குழந்தைகளுடன் பெற்றோர்கள் உண்ணாவிரதம் இருந்தனா்
கோபி திங்களூர் அருகே நிச்சாம்பாளையம் அண்ணா நகர் பகுதியில் குழந்தைகள் அங்கன்வாடி மையம் உள்ளது. இது பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு 7 குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த அங்கன்வாடி மையத்தை மூடிவிட்டு அருகே உள்ள ஒரு அரசு கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. ஆனால் தங்கள் குழந்தைகளை நிச்சாம்பாளையம் அண்ணாநகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திலேயே படிக்க வைக்க வேண்டும் என்றும், எனவே அதனை திறக்கக்கோரியும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு குழந்தை வளர்ச்சி நலத்திட்ட அலுவலர் சூரியகலா அங்கு சென்று பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அதிகாரி கூறும்போது, 'நிச்சாம்பாளையம் அண்ணாநகர் பகுதி அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டு அங்கேயே குழந்தைகளை படிக்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்' என்றார். இதை ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.