மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க கடலூர் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள் தேர்வு
மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க கடலூர் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனா்.
கடலூர்,
மாநில அளவில் 13 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் வருகிற 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக கடலூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் விஜய சுந்தரம் தலைமை தாங்கினார். இணை செயலாளர்கள் சிட்டிபாபு, சகாய செல்வன், மூத்த விளையாட்டு வீரர்கள் நடராஜன், நெடுஞ்செழியன், அமீர்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா கலந்து கொண்டு வீரர்கள் தேர்வை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அதாவது 1.1.2009 -ந்தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து தேர்வுக்கு வந்திருந்த மாணவ- மாணவிகளின் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகல் சரிபார்க்கப்பட்டதும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஆண்கள் அணிக்கு 15 பேரும், பெண்கள் அணிக்கு 15 பேரும் என மொத்தம் 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் மாணவர்கள் தஞ்சாவூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியிலும், மாணவிகள் திருச்சியில் நடைபெறும் போட்டியிலும் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சியில் மூத்த விளையாட்டு வீரர்கள் அப்துல்லா, தயாளன், தமிழ்வாணன், பயிற்சியாளர்கள் மோகனசந்திரன், வினோத்குமார், செங்குட்டுவன், கோவிந்தராஜ், எஸ்.டி.ஏ.டி.ராம்பிரசாத், எஸ்.டி.சி.முத்துராமன், மணி, தியாகு, பாலமுருகன், ரகோத்தமன், ஆக்கி சங்க மாவட்ட செயலாளர் பொன் பாண்டியன், கபடி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.