கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வில் பெண்கள் முன்னேற வேண்டும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேச்சு


கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வில் பெண்கள் முன்னேற வேண்டும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசினார்.

சிவகங்கை

காரைக்குடி,

கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசினார்.

மகளிர் தின விழா

காரைக்குடியில் உள்ள கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகத்தில் மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மகளிர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் திறன் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் மாவட்ட, மாநில அளவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு அன்னை "சோனியா காந்தி' பெயரில் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சாதனை பெண்கள் விருதுகளை கார்த்தி சிதம்பரம் எம்.பி. வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் மாங்குடி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராம.சுப்புராம், சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தேவி மாங்குடி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி இமயமடோனா, மாநில துணை தலைவி ஸ்ரீவித்யா கணபதி, நகர தலைவி அமுதா, நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன், ஐ.என்.டி.யு.சி. மணிலா, பொதுச்செயலாளர் களஞ்சியம், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம், காங்கிரஸ் கட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் ரெத்தினம், அமுதா, அஞ்சலிதேவி, நகர செயலாளர், ரெயில்வே தெட்சிணாமூர்த்தி, மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், பெண்கள் கலந்து கொண்டனர்.

எதிர்மறை கருத்துகள்

நிகழ்ச்சியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசியதாவது:- அனைத்து கட்டுப்பாடுகளையும், சமுதாய தடைகளையும் தாண்டிதான் பெண்கள் முன்னேற வேண்டியுள்ளது. அரசியல் பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து ஒரு பெண் அரசியலுக்கு வருவது சாதாரண விஷயம் அல்ல. அதையும் தாண்டி தேர்தலில் நின்று முக்கிய பொறுப்புகளில் உள்ள பெண்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே. பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் கிடைக்க செய்வது மிக அவசியம். தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 நாடாளுமன்ற தொகுதியில் ஒருவரும், சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 25 சட்டமன்ற தொகுதியில் ஒருவரும் மட்டுமே பெண்களாக இருப்பது போதாது.

பொதுவெளியில் அரசியல் மேடைகளில் பேசும்போது பெண்களுக்கு 33 சதவீதம் கொடுக்க வேண்டும் என்று பேசுகிறோம். ஆனால் கட்சியிலேயே அதற்கு எதிர்மறையான கருத்துக்கள் இருக்கிறது. என்னால் முடிந்தவரை பெண்களுக்கு அங்கீகாரம் அளிப்பதிலும், அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன். பெண்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.


Next Story