பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விடுபட்ட அனைவருக்கும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கழுத்தில் தொங்கவிட்டப்படி வந்து கலெக்டரிடம் மனு வழங்கினர்.
விடுபட்ட அனைவருக்கும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கழுத்தில் தொங்கவிட்டப்படி வந்து கலெக்டரிடம் மனு வழங்கினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். வேளாண்மை துறை இணை இயக்குனர் அகண்ட ராவ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:- ராஜேந்திரன்:-தனியார் வசம் உள்ள பயிர் காப்பீட்டு இன்சூரன்ஸ் திட்டத்தை மாற்றி அமைத்து, மாநில அரசு நடத்த வேண்டும்.அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உலர் எந்திரம் வைத்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்
ராமதாஸ்:-மழை வெள்ள காலங்களில் பாதிப்புக்குள்ளான பயிர்களை பார்வையிட அடிக்கடி மத்திய குழுவினர் வந்து செல்கின்றனர். பாதிப்பு அறிக்கையை மத்திய அரசு வெளியிட காலம் தாழ்த்துகிறது. இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மத்திய குழு ஆய்வு செய்த அறிக்கையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வெளியிட வேண்டும்.
மழைக்காலம் தொடங்க இருப்பதால் நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
பயிர்க்காப்பீட்டு தொகை
பாபுஜி:- திருமருகல் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ஓரிரு விவசாயிகளுக்கு மட்டுமே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.
பாஸ்கரன்:-அரசுக்கு சொந்தமான தனியார் உலர்கலன்களை நபார்டு நிதியுடன் சிமெண்டு கான்கிரீட் உலர் கலன்களாக புதுப்பிக்க வேண்டும்.
சரபோஜி:- 2020-22-க்கான பயிர் காப்பீட்டு தொகை மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.
எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து விடுபட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் உர தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
ஆர்ப்பாட்டம்
முன்னதாக செல்லூர், பாலையூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கழுத்தில் தொங்கவிட்டபடி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2020-21-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு தொகை நாகை மாவட்டத்தில் 28 கிராமங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்.
தமிழக அரசே புதிய காப்பீட்டு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.