தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில்மத்திய அரசு பிராந்திய அளவில்பணியாளர்களை தேர்வு செய்ய கோரிக்கை
தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மத்திய அரசு பிராந்திய அளவில் பணியாளர்களை தேர்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் அகில இந்திய வருமானவரி ஊழியர்கள் மகா சம்மேளன தலைவர் எம்.எஸ்.வெங்கடேசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வருமானவரித்துறை ஊழியர்கள் சங்க 14-வது மாநில பிரதிநிதிகள் மாநாடு வருகிற ஜனவரி மாதம் 5, 6-ந்தேதிகளில் தூத்துக்குடியில் நடக்கிறது. மத்திய அரசு பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கடந்த 1996-ம் ஆண்டு வரையிலும் பிராந்திய அளவில் பணியாளர்களை தேர்வு செய்து பணியிடங்களை நிரப்பினர். அதன்பிறகு அகில இந்திய அளவில் பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர்.
சமீபத்தில் வருமானவரித்துறையில் பணியமர்த்துவதற்காக 800 பேரை தேர்வு செய்து பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் வெறும் 150 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். குறைந்த சம்பளத்துக்கு வடமாநிலங்களில் இருந்து இங்கு வந்து பணியாற்றுவது சிரமம். இதுபோன்ற நிலை தபால் நிலையம், ரெயில்வே உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு பணியிடங்களிலும் நிலவி வருகிறது. மற்ற மாநிலங்களில் இங்கு பணியாற்ற வருவதில் எங்களுக்கு எந்த வருத்தமும் கிடையாது. ஆனால் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஆகையால் பிராந்திய அளவில் பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். 8-வது ஊதியக்குழு அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக வருமான வரி ஊழியர்களின் மகா சம்மேளன 14-வது மாநில பிரதிநிதிகள் மாநாட்டின் வரவேற்பு குழு அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம், அகில இந்திய தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது. மாநில தலைவர் சியாம்நாத், மதுரை மண்டல செயலாளர்கள் ராமலிங்கம், மாரியப்பன், நெல்லை மண்டல செயலாளர் ராஜரத்தினம், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முகமது அகமது ரிபாய், மாவட்ட தலைவர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.