போலீசாருக்கு மன அழுத்தத்தை போக்க புத்துணர்வு நிகழ்ச்சிகள் -டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவுரை


போலீசாருக்கு மன அழுத்தத்தை போக்க புத்துணர்வு நிகழ்ச்சிகள் -டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவுரை
x
தினத்தந்தி 9 July 2023 12:39 AM IST (Updated: 9 July 2023 5:55 PM IST)
t-max-icont-min-icon

போலீசாருக்கு மன அழுத்தத்தை போக்க புத்துணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவுரை வழங்கி உள்ளார்.

திருச்சி

தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்த சைலேந்திரபாபு ஓய்வுபெற்ற நிலையில், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால், புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.

குறைகளை தெரிவிக்கலாம்

அவர் பதவியேற்றுக் கொண்டபோது, `ரவுடிகளுக்கு எதிரான, கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும். பொதுமக்கள் மற்றும் போலீசாரின் குறைகளை தீர்க்கும் வகையில் அவர்களின் மனுக்களை அரசு விடுமுறை நாட்கள் தவிர தினமும் காலை 11.30 மணிக்கு டி.ஜி.பி. அலுவலகத்தில் நேரில் பெறுவேன். அலுவலகத்தின் பார்வையாளர்கள் அறையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் தங்கள் மனுக்களை என்னிடம் அளித்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்' என்று தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, டி.ஜி.பி. சங்கர் ஜிவால், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தி அறிவுரை கூறி வருகிறார். அந்த வகையில் மதுரையில் நேற்று காலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு அவர் மாலையில் திருச்சி வந்தார்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமையில், திருச்சி சரக போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மன அழுத்தம்

கூட்டத்தில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கீழ்க்கண்ட அறிவுரைகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு:-

*காவல்துறையினர் பணியின் போது மன அழுத்தம் இன்றி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

*பொதுமக்களின் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

*சைபர் கிரைம் குற்றங்களை கவனத்துடன் கண்காணித்து குற்றங்களை தடுக்க வேண்டும்.

*பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

விடுமுறை வழங்க வேண்டும்

*பொதுமக்களுடன் நட்புறவை பேணிக்காப்பதை காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

*உரிய காரணங்களோடு விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் போலீசாருக்கு விடுமுறை வழங்க வேண்டும்.

*பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவல்துறையினருக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவ்வப்போது புத்துணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

*போலீசார் தங்களுடைய குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டும்.

இவ்வாறு அறிவுைர வழங்கினார்.

கோரிக்கை

கூட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் போலீஸ் நிலையங்களில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் அவர்களுக்கு விடுமுறை அளிப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் தேவைக்கு ஏற்ப போலீசாரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து புதுக்கோட்டை சரகத்தில் பணிபுரியும் போலீஸ் உயர் அதிகாரிகள் குடும்பத்துடன் இருக்க இட மாற்றம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

கூட்டம் முடிந்தபிறகு டி.ஜி.பி. தஞ்சை மாவட்டம் சென்று தஞ்சை சரக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

திருச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா, திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உள்பட திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டையை சேர்ந்த 5 மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story