புதிய குழு அமைப்பது குறித்து பதில் அளிக்க வேண்டும்; கலாசேத்ராவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த குழுவை அமைப்பது தொடர்பாக பதில் அளிக்கும்படி கலாசேத்ரா அறக்கட்டளைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
சென்னை கலாசேத்ராவில் நடந்த பாலியல் கொடுமை குறித்து விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட விசாரணை குழுவை மாற்றி அமைக்கக்கோரி கலாசேத்ரா மாணவிகள் 7 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
அந்த மனுவில், "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவியர் மீது நடவடிக்கை எடுக்க கலாசேத்ராவுக்கு தடை விதிக்க வேண்டும். மாணவர்களையோ, சாட்சிகளையோ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மிரட்டவோ, தொடர்பு கொள்ளவோ கூடாது.
இந்த வழக்கு தொடர்ந்துள்ள தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட எந்த ஒரு அடையாளத்தையும் வெளியில் சொல்லக்கூடாது. கலாசேத்ராவில் நடந்த பாலியல் சம்பவத்தை மூடி மறைக்கும் வேலையில் பலர் ஈடுபடுகின்றனர். எனவே, இந்த விவகாரத்தை சுதந்திரமாக விசாரிக்கும் விதமாக, பாலியல் புகார் குறித்து விசாரிக்கும் குழுவை மாற்றி அமைக்க வேண்டும்.
பாலியல் தொந்தரவு இல்லாமல் மாணவிகள் கலையை கற்க ஒரு கொள்கையை வகுக்க வேண்டும்'' என்றும் மனுவில் கூறியிருந்தனர்.
மிரட்டல்
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர்.வைகை தன் வாதத்தில் கூறியதாவது:-
பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தபோது, புகாரை வாங்காமல், வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். எழுத்துப்பூர்வமாக புகார் செய்தபோது, காலதாமதமாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறி நிராகரித்துள்ளனர்.
இந்த பிரச்சினை வெளியுலகத்துக்கு தெரிந்த பின்னர் ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கே.கண்ணன், ஓய்வு பெற்ற டி.ஜி.பி. லத்திகா சரண், சோபா வர்தமன் ஆகியோர் கொண்ட கமிட்டியை கலாசேத்ரா அமைத்துள்ளது.
மாணவர்களுக்கும் பாதிப்பு
அதுவும் இந்த கமிட்டி முறையாக அமைக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பின்னர்தான் உதவி பேராசிரியர் ஹரிபத்மனை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இன்னும் 3 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் மாணவிகளை மட்டுமல்ல, 4 மாணவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். ஆனால், இவர்களை காப்பாற்றும் விதமாக கல்லூரி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. எனவே, விசாரணை கமிட்டியை இந்த ஐகோர்ட்டு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
யார் அவர்கள்?
கலாசேத்ரா தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார். இறுதியாக மனுதாரர்கள் கேட்டுள்ள இடைக்கால மனுக்கள் மீது நீதிபதி இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க தொடங்கினார். அப்போது, தங்களது பெயர் உள்ளிட்ட அடையாளங்களை வெளியிடக்கூடாது என்ற கோரிக்கையை ஏற்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது குறுக்கிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்கு தொடர்ந்த 7 மாணவிகள் யார்? என்று தெரிந்தால்தான், அவர்கள் கூறும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க முடியும் என்று கூறினார். இதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.
அரசுக்கு அறிக்கை
போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை கேட்ட இடைக்கால மனுவை நீதிபதி விசாரணைக்கு எடுத்தபோது, மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் உத்தரவாதம் அளித்தார். இதை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.
பின்னர், கலாசேத்ராவில் நடந்த பாலியல் கொடுமை குறித்து தமிழ்நாடு பெண்கள் ஆணையம் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்ற இடைக்கால மனுவை விசாரணைக்கு எடுத்தபோது, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, விசாரணை அறிக்கையை அரசு ஆணையம் வழங்கி விட்டது என்றார். உடனே அந்த அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
குழு அமைப்பு
இதையடுத்து, பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விசாரணை குழுவை மாற்றி அமைக்க வேண்டும். அதில், கலாசேத்ரா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இடம் பெறக்கூடாது, மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோர் இடம் பெறவேண்டும் என்ற கோரிக்கை மனுவை எடுத்தார்.
அப்போது நீதிபதி, 'இந்த குழுவை மாற்றிய அமைக்கவும், அந்த குழுவின் தலைவராக தகுந்த நபரை நியமிக்கவும் முடிவு செய்துள்ளேன். இருந்தாலும், இதுகுறித்து கலாசேத்ரா அறக்கட்டளை தன் தரப்பு விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று விசாரணை குழு அமைப்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்' என்று உத்தரவிட்டார்.