வழிப்பாதையை மீட்டுத்தரக்கோரிபொதுமக்கள் சாலை மறியல்
விருத்தாசலத்தில் பொதுவழிப்பாதையை மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
பாதை ஆக்கிரமிப்பு
விருத்தாசலம் புதுக்குப்பத்தில் இருந்து டேனிஷ் மிஷன் பள்ளியின் பின்புறம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிக்கு செல்ல பொதுப்பாதை அமைந்துள்ளது. இந்த பொது வழியை தனிநபர் ஒருவர் கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளதாக தெரிகிறது. இதனை அகற்றி பாதையை மீட்டு தரக்கோரி அப்பகுதி மக்கள் விருத்தாசலம் தாசில்தார் மற்றும் கோட்டாட்சியர் அலுவலத்தில் பலமுறை புகார் அளித்தனர்.
சாலை மறியல்
இருப்பினும் அதிகாாிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முன் வராததால் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விருத்தாசலம்-கடலூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் மற்றும் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு செல்லும் பொதுவழிப்பாதையை தனிநபர் மறித்து வேலி அமைத்து விட்டார்.
இதனால் மாணவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் வேலியை தாண்டி செல்ல வேண்டி உள்ளதால், சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி பாதையை மீட்டுத்தர வேண்டும். இல்லை எனில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். அப்போது அதிகாாிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் போில், அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.