மகளிர் சுய உதவிக்குழு பொருட்களை விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடி திட்டம்


மகளிர் சுய உதவிக்குழு பொருட்களை விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடி திட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 7:14 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் சுய உதவிக்குழு பொருட்களை விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடி திட்டத்தில் பயனடைய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

மகளிர் சுய உதவிக்குழு பொருட்களை விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடி திட்டத்தில் பயனடைய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மதி எக்ஸ்பிரஸ்

2023-24-ம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் முக்கிய இடங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய தமிழக அரசு மதி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் வாகன அங்காடியை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு கூடுதலாக சந்தை வாய்ப்புகள் கிடைப்பதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுகிறது.

இந்த மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடியை இயக்க விண்ணப்பிப்பவர்கள் சுயஉதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும், இலகுரக வாகனம் ஓட்டுநர் உரிமம் வைத்து இருக்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், விதவை மகளிர் மாற்றுத்திறனாளிகள், ஆண் மாற்றுத்திறனாளிகளாக இருத்தல் வேண்டும். முன்னுரிமை தகுதியில் விண்ணப்பங்கள் ஏதும் பெறப்படவில்லை எனில் பொதுமாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே விற்பனை வாகன அங்காடி வழங்கப்படும். தேர்வுசெய்யப்படும் உறுப்பினர் சிறப்பு சுய உதவிக்குழு, ஊராட்சிஅளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்; உறுப்பினராக உள்ள சிறப்பு சுய உதவிக்குழு தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையத்தில் பதிவு பெற்றிருத்தல் அவசியம். பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவமுடையவராக இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் உறுப்பினர் மீது எந்த வித புகார்களும் இல்லை என்பதையும் வங்கி மற்றும் சமுதாய அமைப்புகளில் வாராக்கடன் ஏதும் இல்லை எனவும் சான்றிதழ் வழங்க வேண்டும்.

உரிமை இல்லை

வாகனஅங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடமே இருக்கும். அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டும் பயனாளிக்கு வழங்கப்படும். வாகனத்தை விற்பனை செய்யவோ, வேறு நபருக்கு மாற்றவோ உரிமை இல்லை. வாகன அங்காடி நடத்த இயலாத பட்சத்தில் மீண்டும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். விதிமுறைகள் மீறிசெயல்படும் உறுப்பினரிடம் இருந்து வாகன அங்காடியை திரும்ப பெற்றுக் கொள்ள மாவட்ட திட்ட இயக்குநர் மூலம் உரிய அறிவிப்பு ஆணைகள் வழங்கி பறிமுதல் செய்ய மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்துக்கு முழு அதிகாரம் உண்டு. தொடர்ந்து ஒருவார காலத்திற்கு மேல் வாகனம் இயக்கப்படவில்லையெனில் வாகன அங்காடி பறிமுதல் செய்யப்படும். அங்காடிக்கு வாடகை ஏதும் கிடையாது. பராமரிப்பு செலவினங்களை சம்பந்தப்பட்ட பயனாளியே மேற்கொள்ள வேண்டும். விற்கப்படும் பொருட்களில் 50 சதவீதம் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களாக இருத்தல் வேண்டும். மாநில வழங்கல் மற்றும் விற்பனை சங்க வழிகாட்டு நெறிமுறைகளின்படி பேக்கிங் மற்றும் லேபிளிங் இருத்தல் வேண்டும். அனைத்து உணவுப் பொருட்களுக்கும் உணவு தரக்கட்டுப்பாட்டு துறை சான்று பெற்று இருத்தல் வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட எவ்வித பொருட்களும் விற்பனை செய்ய கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி உடைய பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் நலிவுற்ற குடும்ப உறுப்பினருக்கு முன்னுரிமையின் அடிப்படையில் மாவட்ட அளவிலான குழு இறுதி செய்யும் உறுப்பினருக்கு வழங்கப்படும்.

மேற்கண்ட விதிமுறைகளின் படி வாகனம் இயக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் (2வது தளம்) மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ, நேரிலோ வருகிற 22-ந் தேதிக்குள் கிடைக்குமாறு சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story