இசைபயிற்சி பள்ளி அமைக்க வேண்டும்
தென்காசி மாவட்டத்தில் இசைபயிற்சி பள்ளி அமைக்க வேண்டும்-முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம்
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் கிளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், நெல்லை-தென்காசி மாவட்ட முதல் மாநாடு மற்றும் கலை இலக்கிய இரவு 2 நாட்கள் நடைபெற்றது. கலை இலக்கிய இரவு நிகழ்ச்சிக்கு மருத்துவர் வி.எஸ்.சுப்பராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி உறுப்பினர் ராஜேஸ்வரி இசக்கியப்பன், எழுத்தாளர் நாறும்பூநாதன், கோமதி அம்பாள் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முதல்வர் ந.பழனிச்செல்வம், சி.எஸ்.எம்.எஸ்.சங்கரசுப்பிரமணியன், வள்ளிநாயகம், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைத்தொடர்ந்து மதிப்புறு மனிதர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவர் அம்சவேணி சுப்பராஜ், டீக்கடை முருகன், பஞ்சர் சுப்பையா ஆகியோருக்கு மதிப்புறு மனிதர் விருதுகளை நடிகை ரோகிணி வழங்கினார். பின்னர் தொட்டுவிடும் தூரத்தில் வானவில் என்ற கவிதை நூலை அவர் வெளியிட தொழிலதிபர்கள் ஆ.வள்ளிராஜன், திவ்யா.எம்.ரெங்கன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க தென்காசி மாவட்ட முதல் மாநாடு மு.சு.மதியழகன், வே.சீதாலெட்சுமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. நகர தலைவர் ப.தண்டபாணி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். நெல்லை மாவட்ட செயலர் வண்ணமுத்து மாநாட்டை தொடக்கி வைத்தார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைப் பொதுச்செயலரும், எழுத்தாளருமான கா.உதயங்கர் புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தி பின்னர் பேசினார்.இந்த மாநாட்டில், தென்காசி மாவட்டத்தில் இசை பயிற்சி பள்ளி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஆ.ஆத்திவிநயாகம் நன்றி கூறினார்.