சாலை அமைக்கும் பணியை தொடங்கக்கோரிபொதுமக்கள் மறியல் போராட்டம்


சாலை அமைக்கும் பணியை தொடங்கக்கோரிபொதுமக்கள் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை அருகே கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைஅமைக்க நிதிஒதுக்கீடு

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் ஊராட்சி காமராஜர் காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி கடந்த 1 ஆண்டுக்கு முன்பு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் நிதி ஒதுக்கப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. செம்மண் கொட்டி, கப்பி கற்கள் போடப்பட்டு சீரமைப்பு பணிகள் தொடங்கியது. அதன்பின் தார் சாலை போடாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதன்காரணமாக கப்பி கற்களால் போடப்பட்ட சாலை குண்டும் குழியுமாக காட்சி அளித்தது.

கீழே விழுந்து விபத்து

மேலும் அந்த சாலையில் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், நிதி ஒதுக்கீடு செய்யப்படும் தார் சாலை அமைத்து தராததை கண்டித்தும், கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தியும் திருவிழந்தூர் மெயின்ரோட்டில் மணல்மேடு செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இதுகுறித்து தகவலறிந்து வந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை- மணல்மேடு சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story