வாழ்க்கையில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும்
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் வாழ்க்கையில் வெற்றி பெற இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி பேசினார்.
ஊட்டி,
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் வாழ்க்கையில் வெற்றி பெற இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி பேசினார்.
பட்டமளிப்பு விழா
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பிரிவில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, சுற்றுலா மேலாண்மை, வணிகவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு 4,000 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை.
இந்தநிலையில் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் 2019, 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் படித்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்த மாணவ-மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா கடந்த 2 நாட்களாக ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் உள்ள அண்ணா உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
1,380 பேருக்கு பட்டம்
விழாவில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சனில் வரவேற்றார். சென்னை கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி, பாரதியார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் (பொறுப்பு) விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டு 1,380 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினர்.
அப்போது கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி பேசும்போது கூறியதாவது:-
கல்லூரி படிப்பு முடித்து செல்லும் மாணவர்கள் தற்போது வாழ்வின் முக்கியமான கால கட்டத்தில் இருப்பீர்கள். எனவே, வாழ்க்கையில் இலக்குகளை நிர்ணயித்து திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் வெற்றியடைய முடியும். மாணவ-மாணவிகளின் தனி திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் தள்ளி போடாமல் அன்றைய தினமே முடிக்க வேண்டும். தனித்திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் மொடக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி முதல்வர் எபனேசர், பாரதியார் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் ஜெயபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.