தூத்துக்குடியில் பா.ஜனதா நிர்வாகியிடம்8 மணி நேரம் போலீசார் விசாரணை
தூத்துக்குடியில் பா.ஜனதா நிர்வாகியிடம் 8 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். வியாழக்கிழை மீண்டும் அவரை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய வழக்கில் தூத்துக்குடியில் உத்தரபிரதேச பா.ஜனதா நிர்வாகியிடம் 8 மணி நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நாளை (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு ஆஜராக போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
பா.ஜனதா நிர்வாகி
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதைத்தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த பா.ஜனதா செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மீது தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 153, 153 (ஏ), 504, 505 (1) (பி), 505 (1) (சி), 505 (2) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
8 மணி நேரம் விசாரணை
தொடர்ந்து அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இதையடுத்து பிரசாந்த் உம்ராவ் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றாா். அப்போது, விசாரணை அதிகாரி முன் ஆஜராக அவருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவுப்படி நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் பிரசாந்த் உம்ராவ் தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். மாலை 6 மணி வரை அதாவது 8 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பின்னர் அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
நாளை மீண்டும் விசாரணை
அப்போது, இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்காக நாளை (வியாழக்கிழமை) மீண்டும் ஆஜராக வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டனர்.
இதனால் பிரசாந்த் உம்ராவ் நாளை மீண்டும் போலீஸ் நிலையத்தில் ஆஜராக உள்ளார். அவரிடம் போலீசார் 2-வது நாளாக விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்கள்.