விபத்தில் இறந்த ஊழியரின் குடும்பத்துக்குஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் நிதியுதவி:அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
தூத்துக்குடியில் விபத்தில் இறந்த ஊழியரின் குடும்பத்துக்கு ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் சார்பில் அமைச்சர் கீதாஜீவன் நிதியுதவி வழங்கினார்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பாரத இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சாலை விபத்தில் இறந்தார். அவர் தொகுப்பூதிய பணியாளர் என்பதால் அரசின் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கப்படவில்லை. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்களிடம் நிதி வசூலிக்கப்பட்டது.
அதன்படி மொத்தம் ரூ.3 லட்சம் பெறப்பட்டது. இந்த தொகை மற்றும் தனது பங்களிப்பாக ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், இறந்த ராதாகிருஷ்ணனின் மனைவி வளர்மதியிடம் வழங்கினார்.
மேலும் கணவரை இழந்து வாடும் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும், தற்காலிக பணியாளர்கள் பணியின் போது இறந்தால், முதல்-அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வழங்கவும், காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற அரசுக்கு பரிந்துரை செய்யவும் வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.