தஞ்சை வந்த பெண்ணிடம் 32 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சை வந்த பெண்ணிடம் 32 பவுன் நகைகள் திருட்டு
தேவகோட்டையில் இருந்து தஞ்சை வந்த பெண்ணிடம் 32 பவுன் நகைகள் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்பணம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி(வயது 42). இவர் தனக்கு சொந்தமாக நிலம் வாங்க முடிவு செய்துள்ளார். இதற்கான முன்பணம் கொடுக்க எண்ணிய புவனேஸ்வரி சம்பவத்தன்று தஞ்சையில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு வந்தார்.
முன்னதாக சிவகங்கையில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்சில் வந்தார். பின்னர் அங்கிருந்து விளார் சாலையில் உள்ள கற்பக விநாயகர் கோவில் தெருவில் உள்ள தங்கை வீட்டிற்கு ஆட்டோவில் சென்றார்.
32 பவுன் நகைகள் திருட்டு
தங்கையின் வீட்டிற்கு சென்ற பின்னர் புவனேஸ்வரி தனது தங்கையிடம் தான் கொண்டு வந்த நகையை அடகு வைத்து பணமாக மாற்றி தருமாறு கேட்டுள்ளார். அப்போது தான் கொண்டு வந்த பையை பார்த்துள்ளார். அப்போதுதான் பையில் வைத்திருந்த 32 பவுன் நகைகளை காணாதது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி, தனது நகைகள் திருட்டு போனது குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.