பஸ்சிலிருந்து இறங்கிய மூதாட்டியிடம் 6¾ பவுன் சங்கிலி திருட்டு
முத்தையாபுரத்தில் பஸ்சிலிருந்து இறங்கிய மூதாட்டிக்கு உதவுவது போல நடித்து 6¾ பவுன் சங்கிலியை திருடி சென்ற 3 மர்ம பெண்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ஸ்பிக்நகர்:
முத்தையாபுரத்தில் பஸ்சிலிருந்து இறங்கிய மூதாட்டிக்கு உதவுவது போல நடித்து 6¾ பவுன் சங்கிலியை திருடி சென்ற 3 மர்ம பெண்களை போலீசார் தேடிவருகின்றனர்.
மூதாட்டி
ஏரல் தாலுகா புதுசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுக ஜோதி (வயது 75). இவர் முத்தையாபுரத்தில் வசித்து வரும் அவரது மகன் வீட்டிற்கு செல்வதற்காக பழைய காயலில் இருந்து தூத்துக்குடி செல்லும் பஸசில் ஏறி பயணம் செய்துள்ளார். ஸ்பிக் நகர் பஸ் நிறுத்தத்தில் அவர் இறங்கிய போது, 3 மர்ம பெண்கள் பஸ்சிற்குள் இருந்தவாறு மூதாட்டியின் கைப்பையை தூக்கிக் கொடுத்து உதவி செய்துள்ளனர்.
தங்க சங்கிலி மாயம்
பஸ் புறப்பட்டவுடன் சிறிதுதூரத்தில் அந்த 3 பெண்களும் நிறுத்த சொல்லியுள்ளனர்.
பின்னர் அந்த பஸ்ஸிலிருந்து அவசரமாக இறங்கிய அந்த பெண்கள் சாலைஓரத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி மாயமாகி விட்டனர். ஆறுமுகஜோதி முத்தையாபுரத்தில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரது கழுத்தில் அணிந்திருந்த 6 3/4பவுன் சங்கிலி மாயமாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் பஸ்சிலிருந்து இறங்கியபோது கைப்பையை தூக்கி கொடுத்து உதவுவது போல 3 பெண்களும் நகையை திருடி சென்றிருப்பதை அறிந்துள்ளார்.
மர்ம பெண்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நூதன முறையில் தங்க சங்கிலியை திருடி சென்ற 3 மர்ம பெண்களை தேடிவருகின்றனர்.