குளத்தில் கோழி கழிவு வீசியவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
மார்த்தாண்டம் அருகே குளத்தில் கோழி கழிவு வீசியவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே குளத்தில் கோழி கழிவு வீசியவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோழி கழிவு வீச்சு
மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பேரூராட்சி பகுதியில் உதியனூர்குளம் உள்ளது. இந்த குளத்து நீரை அந்த பகுதி பொதுமக்கள் குளிப்பதுடன், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகிறார்கள்.
நேற்று காலையில் ஒரு டெம்போவில் 3 பேர் வந்தனர். அவர்கள் டெம்போவை குளத்தின் கரையில் நிறுத்தி, அதில் இருந்த 2 மூட்டை கோழி கழிவுகளை தூக்கி குளத்தில் வீசினர்.
ரூ.15 ஆயிரம் அபராதம்
இதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் பார்த்தனர். உடனே அவர்கள் டெம்போவை அங்கிருந்து செல்ல விடாமல் தடுத்து, பேரூராட்சி கவுன்சிலர் அனிட்லின் பாலுவுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவர் பமலா, செயல் அலுவலர் விமலா விஜி ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அவர்கள் கோழிக்கழிவு மூட்டைகளை வீசியவர்களை வைத்தே குளத்திலிருந்து தூக்க வைத்து டெம்போவில் ஏற்றினர். பின்னர் கோழி கழிவுகளை வீசிய வெள்ளியாவிளை பகுதியை சேர்ந்த சார்லஸ் என்பவருக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தார். அதைத்தொடர்ந்து அபராதத்தை செலுத்திவிட்டு, அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.