தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.10லட்சம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
குலசேகரன்பட்டினத்தில் தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.10லட்சம் வழிப்பறி செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினத்தில் தனியார் நிறுவன மேலாளரை ரூ.10லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் டிரைவர் உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.9.36லட்சம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.10 லட்சம் வழிப்பறி
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் பழைய இரும்புகளை வாங்கி சென்னையில் உள்ள இரும்பு உருக்கு ஆலைக்கு விற்பனை செய்யும் நிறுவனத்தின் மேலாளராக வடக்கு ஆத்தூர் முத்தாரம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 5-ந் தேதி உடன்குடியில் உள்ள ஹார்டுவேர் கடையில் ரூ.10லட்சம் வசூல் செய்து கொண்டு தூத்துக்குடிக்கு லோடுஆட்டோவில் சென்றபோது, தருவைகுளம் இசக்கியம்மன்கோவில் அருகே சென்ற மோட்டார் சைக்கிள் வந்த மர்மநபர்கள் வழிமறித்தனர். செந்தில்குமாரிடம் தகராறு செய்து அவர் வைத்திருந்த ரூ.10லட்சம் பணப்பையை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
5 பேர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழிப்பறி திருடர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் லோடு ஆட்டோ டிரைவர் சின்னத்துரை உறவினர்களுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து நேற்று லோடு ஆட்டோ டிரைவரான சின்னத்துரை, அதே நிறுவன மற்றொரு டிரைவரான தாளமுத்துநகர் முத்துகுமார் (32), தாள முத்துநகர் ஆறுமுகம் மகன் முத்துமணி (26), தூத்துக்குடி அண்ணாநகர் ஜெயலானி மகன் கமல்பாட்சா (26), முத்து மணியின் தாயார் முத்துலெட்சுமி (55) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது ெசய்தனர். அவர்களிடமிருந்து ரூ.9.36லட்சம் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.