தூத்துக்குடி வீராங்கனைக்கு ரூ.14 லட்சத்தில் சைக்கிள்


தூத்துக்குடி வீராங்கனைக்கு  ரூ.14 லட்சத்தில் சைக்கிள்
x

சர்வதேச போட்டியில் பங்கேற்க வசதியாக தூத்துக்குடி வீராங்கனைக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான சைக்கிளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

தூத்துக்குடி

சர்வதேச போட்டியில் பங்கேற்க வசதியாக தூத்துக்குடி வீராங்கனைக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான சைக்கிளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

தூத்துக்குடி வீராங்கனை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. தனது 13 வயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவரான இவர் மாவட்ட, மண்டல அளவிலான பல்வேறு சைக்கிள் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்று உள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான சைக்கிள் வாங்குவதற்கு அவரிடம் போதுமான வசதியில்லாத காரணத்தால் அந்த போட்டியில் ஸ்ரீமதி பங்கேற்கவில்லை.

கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை

இதையடுத்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. நாடாளுமன்ற குழு துணைத் தலைவருமான கனிமொழியிடம், தனக்கு சைக்கிள் வேண்டும் என்று ஸ்ரீமதி கோரிக்கை விடுத்தார்.

இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி, புதிய சைக்கிள் ஒன்றை அவருக்கு வழங்கினார். இந்த சைக்கிளின் மூலமாக ஸ்ரீமதி, ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் சைக்கிள் போட்டிகளில் கலந்துகொண்டு குழு போட்டியில் தங்கப்பதக்கத்தையும், தனித்து போட்டியிட்டதில் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றார்.

மேலும் கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடந்த ஆசிய அளவிலான டிராக் சைக்கிளிங் குழு போட்டியில் கலந்துகொண்டு 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.

சர்வதேச போட்டி

இந்த நிலையில் இஸ்ரேலில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) நடைபெற உள்ள உலக ஜூனியர் பெண்கள் சாம்பியன் போட்டியில் பங்கேற்பதற்காக பிரத்யேக சைக்கிளை தனக்கு வழங்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி.க்கு ஸ்ரீமதி மீண்டும் கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்று, ரூ.14 லட்சம் மதிப்பிலான நவீன சைக்கிள், ஹெல்மெட், ஷூ ஆகியவற்றை தூத்துக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து கனிமொழி எம்.பி., ஸ்ரீமதியிடம் நேற்று வழங்கினார். பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அப்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் உடன் இருந்தார்.

இந்தியாவில் இந்த சைக்கிளை பயன்படுத்தும் முதல் பெண் வீராங்கனை ஸ்ரீமதி என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story