எழுத்தாளர் உதயசங்கருக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பாராட்டு
சாகித்ய அகாடமி பாலபுரஸ்கார் விருதுபெற்ற எழுத்தாளர் உதயசங்கருக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்தார்.
கோவில்பட்டி:
சாகித்ய அகாடமி பாலபுரஸ்கார் விருதுபெற்ற எழுத்தாளர் உதயசங்கருக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்தார்.
பாலபுரஸ்கார் விருது
கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு மகாகவி நகரில் குடியிருப்பவர் எழுத்தாளர் உதயசங்கர். இவர் எழுதிய
ஆதனின் பொம்மை என்ற இளையோர் நாவலுக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து அவரது வீட்டிற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சென்று வாழ்த்து தெரிவித்தார். அவர் எழுதிய ஆதனின் பொம்மை புத்தகத்தையும் வாங்கினார். பின்னர் முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை போனில் தொடர்பு கொண்டு, அவரிடம் கொடுத்தார். அவரை எடப்பாடி பழனிசாமி போனில் வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர அ.தி.மு.க. செயலாளர் விஜய பாண்டியன், பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோவில் கும்பாபிஷேகம்
மேலும், கோவில்பட்டி அருகே உள்ள கொடுக்கான்பாறை கிராமத்தில் உள்ள தேவி காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோவில் பிரகாரம் வழியாக எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மூலஸ்தானத்தில் அம்மனுக்கு 21 அபிஷேக பொருட்களால் சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இவ் விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் அன்பு ராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.