திருச்செந்தூர் நகராட்சி கூட்டத்திற்குதி.மு.க கவுன்சிலர் கருப்பு சட்டை அணிந்து வந்ததால் பரபரப்பு
திருச்செந்தூர் நகராட்சி கூட்டத்திற்கு தி.மு.க கவுன்சிலர் கருப்பு சட்டை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நகராட்சியில் வரிவிதிப்பு சம்பந்தமாக சிறப்பு கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் சிவா ஆனந்தி தலைமை தாங்கினார். ஆணையாளர் வேலவன், துணை தலைவர் செங்குழி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு 16-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆனந்த ராமச்சந்திரன் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தார். அவர் கூறுகையில், நான் வரிவிதிப்பு குழுவில் இடம் பெற்றுள்ளேன். ஆனால் எனக்கு தெரியாமலே சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு என்னுடைய எதிர்ப்பை பதிவு செய்வதற்காக கருப்பு சட்டை அணிந்து வந்திருப்பதாக தெரிவித்தார். மேலும் கூட்டத்தில் பேசிய பெரும்பாலான பெண் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினை இருப்பதாக தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த துணை தலைவர் செங்குழி ரமேஷ் கூறுகையில், நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பம்பிங் லைனில் சட்ட விரோதமாக பல இடங்களில் குடிநீர் இணைப்புகள் உள்ளது. இதனை கண்டறிந்து. நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகரீதியாக செயல்படும் தனியார் லாட்ஜிகள் மற்றும் மண்டபங்களில் குடிநீர் இணைப்புகளை ஆய்வு செய்து முறைப்படுத்தப்படுத்த வேண்டும். இதன்மூலம் ஓரளவு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும், என்றார்.
மேலும் அதிகாரிகள் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதேபோல், நகராட்சியில் வரி விதிக்கப்பட்டதை மறு மதிப்பீடு செய்யப்பட்டது. அதன்படி ஏ, பி, சி மண்டலத்திற்கு 45 பைசா, 35 பைசா மற்றும் 25 பைசா என சொத்து வரி விதிப்பு செய்து அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.