திருச்செந்தூருக்கு அணி அணியாக வந்த பாதயாத்திரை பக்தர்கள்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு அணி அணியாக வந்த பாதயாத்திரை பக்தர்கள் குவிந்து காணப்படுகின்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் அணி அணியாக திருச்செந்தூருக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
தைப்பூச திருவிழா
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் 4.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடைபெறுகிறது.
பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்துக்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரமாகி, சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
அணி அணியாக வந்த பக்தர்கள்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திைரயாக கோவிலுக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
சுவாமி வீதிஉலா
சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுத்த நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடந்தது. அதேபோல் சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி, தீபாராதனை நடந்தது. மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.