ஓட்டப்பிடாரம் யூனியனில் கிராம சாலைகளை பயன்படுத்தபஞ்சாயத்து நிர்வாகத்திடம் காற்றாலை நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டும்


ஓட்டப்பிடாரம் யூனியனில் கிராம சாலைகளை பயன்படுத்தபஞ்சாயத்து நிர்வாகத்திடம் காற்றாலை நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டும்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் யூனியனில் கிராம சாலைகளை பயன்படுத்த பஞ்சாயத்து நிர்வாகத்திடம் காற்றாலை நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டும் என்று பஞ்சாயத்து தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் யூனியனிலுள்ள கிராம சாலைகளை பயன்படுத்த பஞ்சாயத்து நிர்வாகங்களிடம் காற்றாலை நிர்வாகங்கள் அனுமதி பெறவேண்டும் என்று நேற்று நடந்த சமாதான கூட்டத்தில் 25 பஞ்சாயத்து தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

சமாதான பேச்சுவார்த்தை

ஓட்டப்பிடாரம் யூனியனில் உள்ள கிராம பஞ்சாயத்து இடங்களை காற்றாலை நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்ததாகவும், அரசு அனுமதி இல்லாமல் நடப்படும் மின்கம்பங்களை அகற்ற வேண்டும் உட்பட பல கோரிக்கை முன்வைத்து ஒன்றியத்தில் உள்ள 25 பஞ்சாயத்து தலைவர்கள் குடியரசு தின கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்போம் என அறிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் சாந்தி தலைமை தாங்கினார். தாசில்தார் நிஷாந்தினி, யூனியன் ஆணையாளர் வெங்கடாசலம், யூனியன் கூடுதல் ஆணையாளர் பாண்டியராஜன் மற்றும் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் வேலாயுதசாமி, பொது செயலாளர் இளையராஜா மற்றும் காற்றாலை நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

தொழில்வரி

கூட்டத்தில், காற்றாலை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு விதிப்படி தொழில்வரி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிறுவனங்களில் செலுத்தப்பட வேண்டும். பொதுப்பாதைகள் வண்டிப்பாதைகளை பயன்படுத்துவதற்கும் கிராம பஞ்சாயத்து பாதைகள் பழுதுபட்டால், அதனை பராமரிப்பதற்கும் பஞ்சாயத்து தீர்மானத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட தொகையை பஞ்சாயத்து கணக்கில் செலுத்தப்பட வேண்டும். காற்றாலை நிறுவனங்களின் உற்பத்தில் ஒரு சதவீதத்தை பஞ்சாயத்திற்கு செலுத்துவதற்கு அரசு அனுமதி இருக்கும்பட்சத்தில், அதன்படி பஞ்சாயத்திற்கு செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடையாள அட்டை

மேலும், காற்றாலை நிறுவனங்களில் பணியாற்றும் வெளிமாநிலத்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியில்லாமல் மரங்களை வெட்டுவதை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த இரண்டு கோரிக்கைகளும் கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதே போல், பஞ்சாயத்து சாலைகளை பயன்படுத்துவதற்கு பஞ்சாயத்தின் அனுமதி பெற வேண்டும். இல்லையென்றால் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடுப்பு அமைக்கப்படும் என பஞ்சாயத்து தலைவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஜன.26-ம் தேதி எந்தவித இடையூறுமின்றி கிராம சபை கூட்டம் நடத்தி தரப்படும் எனவும் பஞ்சாயத்து தலைவர்கள் தெரிவித்தனர்.


Next Story