புகையிலை பொருட்கள் விற்பனை விழுப்புரத்தில் 3 கடைகளுக்கு சீல்
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
விழுப்புரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார், குருசாமிபிள்ளை தெரு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அவர் வைத்திருந்த பையினுள் 384 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர், விழுப்புரம் பாகர்ஷா வீதியை சேர்ந்த முன்னா என்கிற முகமது பிராணி (வயது 32) என்பதும், இவர் புகையிலை பொருட்களை கடத்திச்சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் விழுப்புரம் அய்யனார்குள தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக விழுப்புரம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரகு (60) என்பவரை நகர போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 132 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் விழுப்புரம் பாண்டியன் நகரில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக விழுப்புரம் அருகே திருப்பாச்சனூரை சேர்ந்த ராமமூர்த்தி (41) என்பவரை விழுப்புரம் தாலுகா போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 415 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, விழுப்புரம் பாண்டியன் நகர், அய்யனார் குளத்தெரு, காகுப்பம் ஆகிய இடங்களில் உள்ள 3 பெட்டிக்கடைகளை விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் முன்னிலையில் நகராட்சி ஊழியர்கள் பூட்டி சீல் வைத்தனர்.