காரில் கடத்தி வரப்பட்ட 678 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


காரில் கடத்தி வரப்பட்ட 678 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

பெங்களூருவில் இருந்து கும்பகோணத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட 678 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

பெங்களூருவில் இருந்து கும்பகோணத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட 678 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

ரகசிய தகவல்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து காரில் கும்பகோணத்துக்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் கும்பகோணம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர்.

புகையிலை பொருட்கள்

இந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் காரில் கடத்தி வந்தது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் ராஜஸ்தான் மாநிலம் ஜாலூரை சேர்ந்த ஒட்டாராம் மகன் ரமேஷ்குமார்(வயது 22) என்றும் அவர் கும்பகோணத்தில் உள்ள ஒருவருக்கு இந்த புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.ரமேஷ்குமார் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் கும்பகோணம் வீணைத்தீர்த்தான் தெருவை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் தெட்சிணாமூர்த்தி(32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இவர் பீடி தயாரிக்கும் தொழில் செய்வதாக கூறி சோழபுரம் பிரதான சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து அந்த வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

2 பேர் கைது

மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனங்கள் மற்றும் காரை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.தெட்சிணாமூர்த்தி மற்றும் ரமேஷ்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் 678 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 2 கார்கள், 3 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story